×

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: 2023-24ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக முதல்வரால் தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி கலை, மனித நேயம் (ம) சமூக அறிவியல் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் அறிவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 60 மாணாக்கர்களுக்கும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை முதல் இரண்டாண்டுகளுக்கு மாதம் ரூ.25,000/- வீதமும், மூன்றாம் ஆண்டிற்கு மாதம் ரூ. 28,000/- வீதம் 12 மாதங்களுக்கும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த மாணாக்கர்களை தெரிவு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டு இதற்கான அறிவிப்பு (https://trb.tn.gov.in/) என்ற இணையதளத்தில் 16.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணாக்கர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023-24-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக 20.10.2023 முதல் 15.11.2023 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

The post முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திமுக ஆட்சியில் மகளிர் வாழ்வில்...